வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday 22 June 2021

இனி அதிரடி விற்பனை செய்ய முடியாது...?

ஆன் - லைன் வர்த்தக தளங்களில் பெரும் தள்ளுபடியுடன் 

வழங்கப்படும் மோசடி விற்பனைகளை தடைசெய்யவும், இந்த நிறுவனங்களை DPIIT தளத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கவும் முன்மொழியப்பட்ட 2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளை திருத்துவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன .


இது தவிர, ஆன் லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையத்தில் தேடலின் போது, பயனர்களை தவறாக வழிநடத்துவதற்கான தடை மற்றும் தலைமை இணக்க அலுவலரை மற்றும் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட வேறு சில திருத்தங்களையும் அரசு பரிசீலித்து வருகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எந்தவொரு சட்டத்தின் கீழும் குற்றங்களை தடுத்தல், கண்டறிதல் மற்றும் விசாரணை ஆகியவற்றை மேற்கொள்ள அரசு நிறுவனத்திடமிருந்து உத்தரவு கிடைத்த 72 மணி நேரத்திற்குள், ஆன் - லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்க வேண்டும் .

நுகர்வோர் பாதுகாப்பு (ஆன் லைன் வர்த்தகம்) விதிகள், 2020 முதன்முதலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தளத்தில் (DPIIT) ஈ-காமர்ஸ் நிறுவனங்களை பதிவு செய்யவும் மத்திய அரசு (Central Government) திட்டமிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் (ஜூலை 6, 2021 க்குள்) js-ca@nic.in என்ற மின்னஞ்சலுக்கு, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த பரிசீலனைகள் / கருத்துகள் / பரிந்துரைகளை அனுப்பலாம்" என்று நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார் .

ஆன் லைன் வர்த்தகம் (e-commerce) செயல்பாட்டில் மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் சங்கங்களிலிருந்து பல புகார்கள் வந்துள்ளதாக ஒரு தனி அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், வழக்கமாக நடத்தப்படும் இ-காமர்ஸ் தள்ளுபடி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது என்று அமைச்சகம் கூறியது.  குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்லது அடிக்கடி ஃபிளாஷ் விற்பனையை மேற்கொள்வது, விலைகளை உயர்த்துவது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது போன்ற நோக்குடன் செய்யப்படும் விற்பனை அனுமதிக்கப்படாது.  தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும், நிறுவனங்கள் சட்டம், இந்திய கூட்டு நிறுவன சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை DPIIT விதிகளின் கீழ் தனியாக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஈ-காமர்ஸ் தளங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதையும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. 

பகிர்வு:  zee news

Sunday 20 June 2021

காலம் மாறிப் போச்சு...

விருந்தே மருந்தாக!   

அண்ணா நகருக்குச் சென்றிருந்த நான் அங்கு வாழும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர, சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்குச் சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர்பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு 


 

 வந்திருக்கலாமே என்பதுபோலப் பார்த்தார். ‘‘ நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்..’’ என்று சமாளித்துத் திரும்பினேன்.  விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்று உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்றுவிட்டவர்களைக் கழற்றிவிட்டுப் பல நாட்களாகிறது.  அந்தக் காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்திருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.  எப்போதும் வரலாம்  நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியாதைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப்படுவார்கள். நகரத்துக்குச் செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்குத் துணி எடுக்கவும், தீபாவளிக்குப் புதிதாக வெளியான திரைப்படம் பார்க்கவும் நகரத்துக்கு வருகிறவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாததால், உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டிச் சொல்லும் வசதிகள் அன்று இல்லை. வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்பதைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பிப் பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாகச் சமைப்பது அன்றைய வழக்கம்.  வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர் காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் சமையல் மணக்க மணக்கத் தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.  இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண அங்கு நாய்கள்கூடத் தயாராக இல்லை. சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலம் இது. அவர்களையும் அழைத்துக்கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காகப் பரிமாறப்படும். வந்தவர்கள் அவற்றைப் பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.  பேசுவதெல்லாம் கதை  எங்கள் சின்ன வயதில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்தக் காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என்று வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம். அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு.  அவர்களுடன் யார் இரவில் படுத்துக்கொள்வது என்று போட்டிப் போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய்த் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.  வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்றுடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிற உறவுகள் உண்டு.  வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச்சரக்காகக் கருதப்பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷப் பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் குதூகலம் தரும். இன்று அக்காள், அண்ணனோடு  மட்டும் உறவு முடிந்துவிட்டது.  அவர்களும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்குக் காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்புதான். கிடைக்கிற இடத்தில் பாயை விரித்துப்படுப்பவர் இப்போது இல்லை. வசதிகளோடு சமரசம்  செய்யத் தயாராக இல்லை.  ஆச்சரியம் இழந்த கண்கள்  இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்துக்கொள்கின்றன. அருகில் சென்று ஆசையாய்ப் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளைச் சொல்ல கணினி இருக்கிறது. கணினிக் கதைகளில் கரிசனம் இருக்குமா!  பொழுதுபோகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசியால் பொழுதுபோதாத தலைமுறை.  உறவு என்பது அன்று இருவழிப் போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தந்தார்கள், ‘அல்ல அவசர’த்துக்கு ஓடி வந்துவிடுவார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது, இன்று கடமையாய்த் தேய்ந்தது.  எனக்குத் தெரிந்து பெரியப்பா  வீட்டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதியின்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியைக் கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன.  ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்தன. அனுசரித்தும், பொறுத்துக்கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலம் அது.  விதவைத் தங்கையைத் தங்களுடன் வைத்துக்கொண்ட அண்ணன்கள் உண்டு.  இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.   உறவுச் சங்கியில் மாற்றம்  காலாண்டுத் தேர்வுக்கும், முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சிகள் நெரிக்காத விடுமுறை உண்டு.  அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்றுத் திரும்பி வருவார்கள்.  நான் எங்கள் அத்தை வீட்டுக்கு 5-ம் வகுப்பு விடு முறையில் சென்று சதுரங்கம் கற்றேன், நீச்சல் பயின்றேன், தேங்காய் உறிக்கக் கற்றேன்.  இன்று எந்தக் குழந்தை யும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையைவிட்டுக்கூட அகல விரும்புவதில்லை.  அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள்தோறும் விரிசல்கள்.  கை நீட்டும் நட்பு  இன்று உறவுவிட்ட இடத்தை நட்பு பிடித்துக்கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை.  இன்று ஆத்ம நண்பர்கள்தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே திருமணத்தின்போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபுரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.  எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும். இத்தனை மாற்றங்கள் நடுத்தரக் குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது. அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சமிருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது.  அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மவுனமாய்க் கற்றுத் தந்துகொண்டே இருக்கிறார்கள்.  - வெ.இறையன்பு  

 நன்றி: இந்து தமிழ் திசை

GOOGLE -ல் தேட வேண்டாம் .. !!

 எச்சரிக்கை :

 வாடிக்கையாளர் சேவை எண்களை GOOGLE -ல் தேட வேண்டாம் .. !! எந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணையும் GOOGLE- ல் தேட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . GOOGLE- ல் இவ்வாறு வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது , பெரும்பாலான தேடல் முடிவுகள் 


 

விளம்பரதாரர்களின் இணையப் பக்கங்களாகவே வருகின்றன . இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் , சமீப காலமாக இது தொடர்பான மோசடிப் புகார்கள் அதிகளவில் காவல்துறையில் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது . அதாவது , சில மோசடியாளர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் , GOOGLE- ல் மக்கள் இதுபோன்று வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது தங்களது இணையப் பக்கங்கள் முதலில் வருவது போல செய்து விடுகிறார்கள் . எனவே , முதலில் வரும் இந்த இணையப் பக்கத்துக்குள் நுழைந்து , தங்களுக்குத் தேவைப்படும் நிறுவனத்தின் சேவையைப் பெற முனையும் மக்கள் , இந்த மோசடியாளர்களின் எண்களைத் தொடர்பு கொள்வது மோசடிக்கு வித்திடுகிறது . இதுபோன்ற மோசடியாளர்கள் பெரும்பாலும் பஞ்சாப் , ஹரியாணா , உத்தரப்பிரதேசம் , பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் . இவர்கள் , தங்களை தொடர்பு கொள்ளும் அப்பாவி மக்களிடம் கிரெடிட் அல்லது டெபிட் அட்டையின் விவரங்களைப் பெற்று பணமோசடி செய்கிறார்கள் . சில மோசடியாளர்கள் ,தங்களிடம் சிக்கும் நபர்களின் செல்லிடப்பேசியில் தானியங்கி செயலிகளைக் கூட பதிவேற்றி , அதனைக் கொண்டு வங்கி மோசடியை அரங்கேற்றுகிறார்கள் .  எனவே , எந்த விதமான தகவல் குறித்தும் GOOGLE- ல் தேடும் போது , அதில் வரும் இணையப் பக்கங்களின் முன்பாக ஆங்கிலத்தில் ஏடி போன்ற எழுத்துக்கள் இருந்தால் அவற்றை தவிர்த்து விடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது .