
மருந்து மாத்திரைகள் உடனடித் தீர்வு கொடுக்குமா? இதற்கு நிரந்தர தீர்வுதான்  என்ன? தொடர் மருத்துவ சிகிச்சை தவிர்க்க முடியாததா? இப்படி மனதுக்குள்  எழும் கேள்விகளால் நொந்து போவோம்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 20 சதவீதம் பேர் தொடர் முதுகுவலியால்  அவதிப்படுவதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வல்லுனர்களின்  அறிவுரைகள் அடங்கிய இந்த அறிக்கையில், முதுகுவலியில் இருந்து நம்மை  பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் சிலவும்  கூறப்பட்டுள்ளன. முயன்றால் முதுகுவலியை விரட்டி விடலாம்.
ஆய்வறிக்கை தரும் அறிவுறுத்தல்கள் வருமாறு: முதலில் சரியான முறையில்  உட்காருவது, படுப்பது போன்ற செய்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடு,  அலுவலகம், வெளியிடங்களில் நிமிர்ந்து உட்கார வேண்டியது மிக முக்கியம்.  தொடர்ந்து ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து சிறிய இடைவெளியில்  வாக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
அலுவலகத்தில் மேஜைக்கு ஏற்றவாறு நாற்காலியின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து  கொள்ள வேண்டும். களைப்பாக இருக்கும் நேரத்தில் தலையை மேஜை மீது சாய்த்து  ஓய்வெடுப்பது முதுகெலும்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இத்தகைய நிலையில்  ஓய்வு தவிர்க்கப்பட வேண்டும்.
சுழல் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள், சுழன்று வேலை செய்வதை தவிர்த்து  எழுந்து சென்று சிறு சிறு வேலைகளை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள  வேண்டும். அதிகமாக முன்புறம் அல்லது பின்புறமாக சாய்வது கூடாது.
கண்கள் பாதிக்காத தூரத்தில் புத்தகத்தை வைத்து படிப்பது, எழுதுவது,  தட்டச்சு செய்வது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் முன்னோக்கி குனிந்து  செய்வதை தவிர்த்து முதுகுத் தண்டுவடம் தன்னிலையில் இருக்கும்படி பார்த்துக்  கொள்வது அவசியம்.
உடல் எடை சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முதுகுவலிக்கு எளிய  தீர்வு. மணிக்கொருமுறை சில நிமிட நடைபயிற்சி முதுகுத் தண்டுவடத்துக்கு  பாதுகாப்பு அளிக்கும்.
மேலும் முதுகுவலி ஏற்பட்ட உடன் தகுந்த மருத்துவ அறிவுரையும் சிகிச்சையும்  எடுத்துக் கொள்வதன் மூலம் அதிக பாதிப்பில் இருந்து விடுபடலாம். சத்தான  உணவு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை மற்றும் அறிவுரைகளை பின்பற்றுவதன்  மூலம் இத்தகைய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்  என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
 
 

































