வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday 21 February 2012

கல்வி முறையில் மாற்றம் இல்லாதவரை.....

சென்னையில் ஆசிரியை உமா மகேஸ்வரியை, அவரது வகுப்பில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக வகுப்பறையில் வைத்துப் படுகொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய நிலையில் தற்போது அந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி ஆசிரியர் ஒருவரை பிளஸ்டூ மாணவர்கள் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ளது மருது பாண்டியர் அரசு மேல் நிலை பள்ளி. இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் காலை பிரேயர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு மாணவர்கள் பிரேயருக்கு வராமல் வகுப்பறையிலேயே இருந்தனர். மேலும் மேசையைத் தட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து கோபமடைந்த ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் வகுப்பறைக்குச் சென்று அங்குதாளம் போட்டு கொண்டிருந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்துள்ளார். ஆனால் ஆசிரியரைக் கண்டு கொள்ளாத அந்த இரு மாணவர்களும், சென்னையில் ஆசிரியரைக் குத்திக் கொன்றது போல இங்கும் நடந்து விடும், போய் விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு ஆசிரியர் சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அனைத்து ஆசிரியர்களும் வகுப்புகளுக்குப் போகாமல் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஆசிரியர் சுப்பிரமணி போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். இருவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். இரு மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரையும் மதுரை மேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீஸார் சேர்த்தனர்.

தற்போது இந்த இரு மாணவர்களையும் கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து விட்டனர். இதனால் இருவரும் பள்ளி மூலமாக தேர்வு எழுத முடியாது. தனித் தேர்வர்களாகத்தான் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சம்பவத்தை சுட்டிக் காட்டி பிளஸ்டூ மாணவர்கள் இருவர் ஆசிரியரை மிரட்டிய செயல் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழகத்திலேயே அதிகஅளவிலான மாணவர் தேர்ச்சியைப் பெற்று வரும் விருதுநகர் மாவட்டத்தில் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

http://tamil.oneindia.in

கருத்து :
மேலை நாடுகளைப் போல மாணவர்களை நண்பர்களாக பாவித்து கல்வி கற்கும் முறையிலுள்ள சில நடைமுறைச் சிக்கல்களே இதற்கு காரணம் என கருதுகிறேன்.
ஆசிரியருக்கு உண்டான மதிப்பையும், கண்டிக்கும் உரிமையையும் நாம் பறித்ததினால் வந்த கொடுமையான நிலைமை தான் இது...