வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Wednesday 4 July 2012

ஊறுகாய்(பகுதி-6)


26. மிளகாய் வடை ஊறுகாய்
தேவையானவை : பச்சை மிளகாய் - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : காய்ந்த மிளகாயை அரை மணிநேரம் ஊறவைக்கவும். கறுப்பு உளுந்து, வெந்தயம் இரண்டையும் தனியாக அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பச்சை மிளகாய் ஊறவைத்த காய்ந்த மிளகாய், உளுந்து, வெந்தயம், உப்பு, தயிர் இவற்றுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை சிறிய கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 'பிளாஸ்டிக் ஷீட்’டில் இடவும். ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்தவுடன், ஈரமில்லாத, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.
தேவைப்படும்போது எண்ணெயில் இட்டுப் பொரித்து... சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
மிளகாய் வடையை இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

27. கதுப்பு மாங்காய் ஊறுகாய்
தேவையானவை : சதைப்பற்றுள்ள புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை தோல் நீக்காமல் பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். அவ்வப்போது நன்றாக குலுக்கி விடவும். அதில் தண்ணீர் பிரிந்து வந்ததும், மாங்காய் கதுப்புகளை மட்டும் எடுத்து... வெயிலில் காயவைக்கவும். இதே போன்று 2 நாட்கள் செய்யவும். (மாங்காயில் சிறிது ஈரம் இருக்க வேண்டும்; மொட மொடப்பாக காய வைக்கக்கூடாது.)
வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும். கடுகையும், மிளகாயையும் வெயிலில் காயவைத்து தனித்தனியாக பொடிக்கவும். காய வைத்துள்ள மாங்காயில் கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த ஊறுகாய்க்கு எண்ணெய் தேவை இல்லை.
இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

28. வெந்தய மாங்காய் ஊறுகாய்
தேவையானவை : மாங்காய் - 2, வறுத்துப் பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
உடனடியாக செய்யக்கூடிய இந்த ஊறுகாயை அதிகபட்சம் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

29. மாம்பழ ஊறுகாய்
தேவையானவை : மாம்பழம் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை : மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து மாம்பழத்தில் சேர்க்கவும். இறுதியாக, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள மாம்பழ ஊறுகாய் ரெடி!
சாம்பாருக்கும், தயிர் சாதத் துக்கும் சரியான ஜோடி, இந்த ஊறுகாய்!

30. கிடாரங்காய் ஊறுகாய்
தேவையானவை : பழுத்த கிடாரங்காய் - 2, மிளகாய்த்தூள் - 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை : கிடாரங்காயை பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய கிடாரங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பாதிக்குப் பாதியாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறி இறக்கவும்.
ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி - விகடன்