வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Wednesday 15 October 2014

தகவல் அறியும் உரிமை..!


""தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்போருக்கு, குறித்த நாட்களுக்குள் பதில்களை அனுப்பாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படும்,'' என, காஞ்சிபுரம் கலெக்டர் சிவசண்முகராஜா, அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டம் "பவர்புல்'லானது, அதற்காகச் சென்னையில், 10 கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மனுதாரர்களுக்கு சரியான பதிலை, 30 நாட்களுக்கு கொடுக்காவிட்டால், அவர்களது வேலைக்கு பாதிப்பு ஏற்படும், என்றார்.

உலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ இருக்கின்றன. இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட்டாலும், அவைகளை எல்லாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள மனிதனின் வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ தகவல்கள் இந்த உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய அறிவுத் தேடலுக்குத் தேவையான சில தகவல்களைத் தேடி அதைத் தெரிந்தவர்களிடம் செல்கிறோம். சில தகவல்களுக்காக நூலகங்களுக்குச் செல்கிறோம். சில தகவல்களுக்காக என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவைத் தேடுகிறோம். தற்போது இணையத்தின் வழியாகவும் தேடுகிறோம். இந்தத் தேடுதலுக்கு விடை கிடைத்து விடுகிறது. அரசுப் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டும் நமக்கு எந்தத் தகவல்களுமே கிடைப்பதில்லை. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் விரும்பும் தகவல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது அதற்கு அரசின் சில சட்டதிட்டங்கள் இடையூறாக இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.

நோக்கம் :
                  இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக  தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

தகவல்கள்:
                தகவல் என்றால் என்ன? தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே "தகவல்" என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன.  இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்

தகவல் பெறுவதன் நன்மைகள் :
                                                                 தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.

மாநிலத் தகவல் ஆணையம்:
                                                        தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண்,  மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?
                                                                              தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.
ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
                                                இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண்: 044 -24357580.

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
தொலைபேசி எண்கள்:  011-26717353, 26761137.

                                      2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியுள்ளது(www.persmin.nic.in). 2005 அக்டோபர் 13 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல் பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல் பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல் பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

பிரிவு 4(i)(b) - தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005


பிரிவு 4(1)(b)   
சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய தகவல்கள்  : 
  
(i)    அமைப்பு / நிறுவனத்தின் விபரங்கள், பணிகள், கடமைகள்      
(ii)    அதிகாரிகள், அலுவலர்களது பணிகளும் அதிகாரங்களும்      
(iii)    மேற்பார்வையிடுதல், பொறுப்பேற்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் விதம் பற்றிய நடைமுறைகள்      
(iv)    தனது பணிகளைச்செய்ய வங்கியின் வழிமுறைகள்      
(v)    வங்கி வைத்திருக்கும் / கையாளும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுரைகள், அறிவுரைகளின் தொகுப்புகள், ஏடுகள் – அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் தங்கள் பணிகளைச்செய்யப் பயன்படுத்தும் ஏடுகள்      
(vi)    ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆவண வகைகளின் பட்டியல்      
(vii)    பொதுமக்கள் / அவர்கள் பிரதிநிதிகளைக் கலந்து முடிவுகள் எடுக்க / அமலாக்க ஏதேனும் திட்டம்/பழக்கம்      
(viii)    அறிவுரைக்காக குழுமம், குழு – 2 அல்லது அதற்கு மேற்பட்டதாக கொண்ட அமைப்பு – இந்த அமைப்புகளின் கூட்டம் பொது மக்களுக்குத் திறந்து விடப்படுகிறதா      
(ix)    அதிகாரி / அலுவலர் பெயர் முகவரி கொண்ட தொகுப்பு      
(x)    மாதச்சம்பளம் / சலுகைகள்      
(xi)    திட்டங்கள் / பட்ஜெட்டுகள் / உத்தேச செலவுகள்      
(xii)    பொருந்தாதது      
(xiii)    சலுகைகள் பெறுவோர் விபரம், அங்கீகாரம்      
(xiv)    மின் அணுமுறையில் கொ டுக்கப்பட்ட தகவல்களின் விபரங்கள்      
(xv)    தகவல் பெற குடிமக்களுக்கு உள்ள வசதிகள், பொது உபயோகத்துக்கான நூலகம், படிப்பறைகளின் வேலை நேரங்கள்      
(xvi)    பொதுத் தகவலதிகாரியின் பெயர் மற்றும் முகவரி.