எனக்கு இரண்டு பாட்டிகள். ஒருவர் அம்மாவை பெற்றவள், அடுத்தவர் அப்பாவை வளர்த்தவள். அப்பாவை பெற்று கொஞ்ச நாளில் பாட்டி இறந்து போய்விட்டதாகவும், பாட்டியின் உடன்பிறந்த தங்கை சின்னபாட்டி அப்பாவை வளர்த்ததாக சொல்லுவார்கள்.
இரண்டு பேருமே வியாபாரிகள்… ஒருவள் ஜக்கெட் பிட்களை 20 வருடங்களுக்கு முன்பு வெயிலில் விழுப்பரம் தெருக்களில் ஜாக்கெட்பிட்டே என்று கூவி விற்றவள்.
அப்பாவின் சித்தி கடலூர் லாரன்ஸ் ரோட்டில் 20 வருடத்துக்கு முன் இலைவியாபாரம் செய்து வந்தவள். இருவருமே வியாபாரிகள் என்பதால் அவர்கள் இடுப்பில் வைத்து இருக்கும் சுருக்கு பையில் எப்போதும் சில்லரைகள் வியாபித்து இருக்கும்.
சில்லரைகள் எப்படியாவது ஐஸ் வைத்து பாட்டியிடம் இருந்து வாங்கி அதில் உண்டை வாங்கி தின்பதுதான் அப்போதைய எங்களது முக்கிய பொழுது போக்கு.
பாட்டி இரவு தூங்கும் போது அதில் இருக்கும் சில்லரைகள் எடுத்து காலையில் மஜாவாக சோன்பப்படி கேக் வாங்கி சாப்பிடுவதும், தேன் முட்டாய் வாங்கி, தேன் குறைவாய் இருப்பதற்க்கு வருத்தபட்டு அழுது புலம்புவதும் ரொம்ப பிடித்தமான ஒன்று.
அப்போது எல்லாம் பத்துபைசா இருபது பைசாவைவிட எனக்கு நாலனா எட்டான மீதுதான் எனக்கு ஆர்வம்..அப்போது எல்லாம் ஒரு ரூபாய் என்பது எனக்கு 100 ரூபாய் கிடைத்த பேரானந்தம். இப்போதும் நகர்புற,கிராமபுற ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் ஒரு கிலோ அரிசி ஆசிர்வாதம்தான்.
பாட்டியிடம் எப்படியாவது ஆட்டைய போட்டு, ஐஸ் வைத்து சுருக்கு பையை, சுருக்கிய வயிற்று பகுதியில் இருந்து எடுத்து அதில் கீழ் பக்கம் விரல்களால் முட்டு கொடுத்து சுருக்கு பையில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு போட்ட விரல்களுடன் சில்லரைகளை தேடும் போதும், விரைவாக தேடும் போது சுருக்குபையின் உள்ளே பொங்குவது போலவும் இருக்கும்.
அது பொங்கி கொண்டு இருக்கும் போது அதில் வெற்றிலைகாம்பு, கொட்டை பாக்கு, இரண்டுரூபாய். ஒரு ரூபாய்,ஐந்துரூபாய் என நான்காய் மடித்து வைக்கபட்ட தாள்கள், சாமி பிரசாத விபூதி குங்கும பொட்டலங்கள், சின்ன பாலிதீன் பைகளில் மடித்து வைக்கபட்ட நகைகடை அடகு சீட்டு என வந்து போகும்… அவ்வப்போது சில சில்லரைகளும் வந்து போகும்…
கிழவிகள் ரிலாக்சாக உட்கார்ந்து இருக்கும் போது காசு கேட்டால் நன்றாக புதையல் தேடுவது போல் தேடி,சுருக்குபையில் இருந்து பத்து பைசா தூக்க முடியாமல் தூக்கி கொடுப்பார்கள். இதுவே அவசரமாக கிளம்பும் போது காசு கேட்டால், சட்டென சுருக்கு பையை தூழாவும் போது கையில் கிடப்பதை கொடுத்து விட்டு போவார்கள்.. அதிஷ்டம் இருந்தால் நமக்கு அந்த நேரத்தில் ஒரு ரூபாய் கூட கிடைக்கும்.
சுருக்குபைகள் பல கலர்களில் இருக்கும். அந்த கயிறு முனைகளில் முக்கோண டிசைன்கள் வேறு கொடுத்து தைத்து இருப்பார்கள்.. அதே பையில் ஒர கயிற்றின் நுனியில் பல்குத்தும் குச்சிகள் இரும்பில் இருக்கும், அதில் ஒன்றை பல்குத்தி பல்லிடுக்கில் இருக்கும் வெற்றிலைபாக்கு எடுக்கவும், எல் போல் ஷேப்பில் இருப்பதை காது குடையவும் பாட்டிகள் வைத்து இருப்பார்கள். கால் கவுலி வெற்றிலை,இரண்டு ரூபாய்க்கு மண்பாக்கு வாங்கி சுருக்குபையை கர்பவதி போல் அக்கிக்கொண்டே இருப்பது என் பாட்டியின் பொழுது போக்கு.
கிராமபுற கோவில் திருவிழாக்களில் இரண்டு சுருக்கு பை வாங்கி வைத்துக்கொண்டு ஆறு மாதத்துக்கு ஒன்று என்று மாற்றிக்கொள்வார்கள். வாழை வியாபாரம் செய்யும் பாட்டியின் சுருக்குபை வாழைகறைகள் ஏறிக்கிடக்கும். விபரம் தெரியாத போது அது அழுக்கு பை, கப்பு நாத்தபை என்று ஏளனம் செய்து இருக்கின்றேன். உழைப்பின் அருமை இப்போது தெரியும் போது அந்த வாழைகறை ஏறிய சுருக்குபையின் வாசம் பிடிக்க இப்போது மனது ஏங்குகின்றது. அதே போல் ஒரு மண் பாக்கு ஸ்மல் அடித்துகொண்டே இருக்கும்.
சமீபத்தில் சைதாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பெரிய கறுப்பு நிற இடுப்பில் அழுக்கு பாவாடையில் ஒரு நரிக்குறவ பெண் ஒருத்தி சுருக்குபை மாட்டி இருந்ததை பார்த்தேன்.
சுருக்குபை வைத்து இருந்த பாட்டிகள் ரொம்பவும் வெள்ளந்தியாக இருந்தார்கள். எல்லாக்குழந்தைகளும் அவர்களுக்கு ஒன்றுதான். பக்கத்து வீட்டு குழந்தையாக இருந்தாலும் தாங்கள் வாங்கி வந்த தின்பண்டத்தில் பாதியை பகிர்ந்து அளிப்பார்கள். ஆனால் இப்போது உள்ள பாட்டிகள் அப்படி இல்லை , பக்கத்து விட்டு பையனை விடுங்கள் குடும்பத்தித்தினுள்ளே மகள் குழந்தை மகளின் நாத்தனார் குழந்தை என பேதம் பார்க்கபடுகின்றது. இவைகளுக்கு சிரியலும் ஒரு காரணம்.
எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் எந்த பாட்டியும் இப்போது சுருக்குபை வைத்துக்கொள்வது இல்லை. பைக்கு பதில் மார்டன் பாட்டிகள், ஜாக்கெட்டினுள் தொங்கிய மார்பு இடைவெளிகளில் பர்ஸ் வைப்பது வழக்கமாகிவிட்டது. பேருந்தில் பர்ஸ் எடுக்கும் முன் கண்டக்டருக்கு முதுகு காட்டி பர்ஸ் எடுத்து பிரித்து, சில்லரை எடுத்து கொடுக்கின்றார்கள். நாம் கவனிப்பதை பார்த்து விட்டால் பாட்டிகளின் உதட்டில் சிறு புன்னகை பூக்கின்றது. தாத்தாக்களின் காம பார்வையில் தாங்கள் சிக்கிய அந்த காலத்து ஞாபகங்கள் போல அந்த புன்னகை தெரிவிக்கினிறது.
இப்போதும் சுருக்குபை பற்றி நினைக்கும் போது, அந்த ஆள்காட்டி சுண்ணாம்பு விரல்கள் சுருக்குபையினுள் சில்லரை தேடும் காட்சி நினைக்கும் போது அந்த உழைப்பாளி பாட்டிகளுக்கும் எப்போதும் சுடு மூஞ்சியை காட்டாத அந்த பாட்டிகளுக்கு எனது ராயல் சல்யுட்.
No comments:
Post a Comment