Sunday, 21 August 2011

டேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்…


என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் 80களில் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… 3 வருடத்துக்கு பிறகுதான் அந்த பாடல்  ஒளிபரப்பபடும்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..



எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் கிராமபோனில் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும்  முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்…. அப்போது சீத்தாபதி என்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு அப்படி   சத்தமாக போட்டு எங்கள் கிராமத்து காதை கிழித்து தொங்கவிட்டனர்…..

அதன்பிறகு நான் ரசித்த பாடல் டாலிங் டார்லிங் ஐலவ்யூ என்னை விட்டு போகாதே.. என்ற பிரியா படத்தின் பாடல்கள்தான்...   எங்கள் ஊரில் எந்த வீட்டில விசேஷம் என்றாலும் அங்கு சவுண்ட் செட் போடும் இடத்தில் போய் நிற்போம்… அப்படி ஒரு ஆர்வம்….
ஒருமுறை முழு ஆண்டு பள்ளி விடுமுறைக்கு, நான் என் ஆயா வசித்த விழுப்புரத்துக்கு போனேன்… அங்கு மந்தகரையில் உள்ள அமைச்சார் கோவில் நிர்வாகி பழனிபிள்ளை என்பவர் வீட்டில் முதல் முதலாக டேப்ரிக்கார்டரை பார்க்கின்றேன்…

அவர்கள் வீட்டில் எப்போதும் தாய்வீடு படத்தில் வரும் ஜாஹோ.. ஜாஹோ உன்னை அழைத்தது கண்... உறவை நினைத்தது பெண் என்ற பாடலை திரும்ப திரும்ப கேட்பார்கள்..  அதே பாடலை நனும் திரும்ப திரும்ப கேட்க அந்த டேப்ரிக்கார்டர் மேல் எனக்கு மெல்ல காதல் பிறந்தது… பிற்காலத்தில் எனக்கு மென்மையான பாடல்கள் பிடிக்காமல் வெஸ்டர்ன் இசை அதிகம் பிடிக்க இதுதான் முதல்  காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றறேன்….


அதன் பிறகு என் அத்தை வீட்டில் தக்காய் கம்பெனியின் பெட் செட்  ஒன்று இருந்தது.. அதில் அன்பேவா படத்தில் வரும் ஒரு டயலாக்…. என்னது கஷாயமே தான் என்று நாகேஷ் சொல்ல சரோஜாதேவி  யாருக்கு என்று கேட்க??? நகேஷ் பாலுவுக்கு என்று சொல்லும் அந்த இரண்டு வார்த்தையை மட்டும், ஒரு ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டு இருப்போம்…

யாருக்கு பாலுவுக்கு.. யாருக்கு பாலுவுக்கு என்று விடாமல் கேட்டு கேட்டு சிரித்துக்கொண்டு இருப்போம்….ஒரு கட்டத்தில் அந்த பிளே பட்டன் மற்றும் ரிவைன்டிங் பட்டன் எல்லாம் எங்கள் மீது காரி துப்ப தொடங்கிவிட்டது… 

குணா படம் அதில் கடிதம் பாடலில்  கமல் ஒரு முக்கு முக்கு விட்டு ம்ஹும் இது மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல  என்று சொல்லும் அந்த இடத்தில் முக்கும் இடத்தை மட்டும் தனியாக கேட்டு பாருங்கள்…. காலையில் ஆய் வரவில்லை என்றால் முக்குவது போல் அந்த சவுண்ட் இருக்கும்… அதையும் சலிக்க சலிக்க ரிவைண்ட் செய்து கேட்டு கேட்டு சிரிபோம்... அது ஒரு அழகிய காலம்...

நான் தனியாக அது போலான ஒரு தக்காய்  பெட் செட் வாங்கி சொந்தமாக 30 ரூபாய்க்கு ஒரு ஆடியோ கேசட் வாங்கி நான் கேட்ட முதல் பாடல் தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையதட்டுதான்…ஏ பக்கத்தில் தளபதி பி பக்கத்தில் சேரன்பாண்டியன்… அதில்  கண்கள் ஒன்றாக கலந்ததோ.. என்ற பாடல் அதிகம் கேட்டு இருப்பேன்…
அதன் பிறகு லோக்கல் ஆடியோ கேசட்டில் இரண்டு படங்கள் காமினேஷனில் வாங்கி கேட்பேன்…

நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில்  அவைகளை ரெக்கார்ட் செய்தேன்…

பிரம்மாபடத்தில்…. குஷ்பு பாடும்  இவளொரு  இளங்குருவி,அமரன் படத்தில் ஸ்ரீ வித்யா பாடும் பாம்பாயி பாலா என்ற குத்து பாட்டு என அது போல் மாற்றி மாற்றி பல பாடல்கள் ரெக்கார்ட்செய்து வைத்து இருந்தேன்… இதில் என்ன கொடுமை என்றால் அவ்வப்போது சிக்கி எல்லா நல்ல பாடல்களும் வீணாகிவிடும்.. கேசட்டை இரவல் வாங்கி செல்பவர்களும் அதனை ஒழுங்காக திரும்ப தரமாட்டார்கள்..


கடலூர் டூ பாண்டி செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் நிச்சயம் இளையராஜா பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும்…  காரணம் நல்ல பேஸ் வைத்து பேருந்து கடக்கும் போது கும் கும் என்று சத்தம் வெளியில் கேட்கும்…

மிக முக்கியமாக…தெய்வவாக்கு படத்தில் வரும், வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் என்ற இளையராஜா பாடலை கேட்டால் அவ்வளவு சுகமாக இருக்கும்… பேருந்தை ஒட்டிக்கொண்டே ஒரு கையால் கேசட் முடிந்ததும் திருப்பி போட டிரைவர் முயற்ச்சி செய்யும் போது எல்லாம் அல் இல்லாமல் பயணிப்போம்… இருந்தாலும் பாடல் முக்கியம் அல்லவா???

அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்….

சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும்  ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை  நான் உபயோகபடுத்தவே இல்லை….

மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை…..

வெகு நாட்களுக்கு பிறகு என் கல்லூரியில் ஸ்டாப்புகளுக்கு மட்டும் ஒரு பங்ஷன் நடைபெற்றது.. அதில் எதாவது ஒரு திறமையை வௌபடுத்த வேண்டும் என்ற அன்பு கட்டளையை பிரின்சிபல் போட… எல்லோருக்கும் அதனை வழி மொழிவதை தவிர வேறு வழியில்லை….

நான் பாடல் பாடுகின்றேன் என்று சொல்லி விட்டேன்…. எனக்கு முன்பு பாடிய அட்மினில் இருக்கும் அக்கவுண்ட் பெண்மணி, அழகிய அசுர அழகிய அசுரா என்று ஓப்புவித்து விட்டு போனார்… நான் போனேன்..காதலனும் காதலியும் தனிமையில் இருக்கும் போது பேச நிறைய விஷயங்கள் இருக்கும் போது சமுகத்தினை பற்றி யோசிக்கும் இந்தபாடல் என்னை மிக கவர்ந்த பாடல் என்று இன்ட்ரோ சொல்லி விட்டு…. அழகன் படத்தில் வரும் ஜாதிமல்லி பூச்சரமே என்ற பாடலை பாடினேன்….

ஜென்ஸ் ஸ்டாப்களில் நான் சிறந்து பாடியதாகவும்… அந்த அழகான இன்ட்ரோவுக்காகவும் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள்….எனக்கு ஆர்வத்தோடு கலர் கவரை  பிரித்து பார்த்து விட்டு, வெறுத்து போய்விட்டேன்…. அதை தூக்கி போடவும் எனக்கு விருப்பம் இல்லை… காரணம் எனது 32 வருட வாழ்க்கையில் பலர் முன்னிலையில் கைதட்டலோடு நான்  வாங்கிய முதல் பரிசு அது…..

அந்த பரிசு… சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் அதனை டேப்ரெக்கார்டரில் மட்டுமே போட முடியும்… இன்னமும் தூக்கி போட மனமில்லாமல் சீல் உடைக்கபடாமல் சிவாஜிதபாஸ் என்ற வாசகத்தோடு ரஜினி நின்று கொண்டு இருக்கும்,அந்த ஆடியோ கேசட் என் வீட்டில் இன்னும் பத்திரமாக இருக்கின்றது….

No comments:

Post a Comment