உருகும் ஆர்க்டிக் பனியிலிருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்கள்
ஆர்க்டிக் பிரதேச கடல் பனி உருகுவதிலிருந்து - மோசமானது, நச்சுத் தன்மையுடையது என்று கருதப்படும் டீ.டீ.டி (DDT) என்ற நச்சு ரசாயனம் உட்பட பல்வேறு தடைசெய்யப்பட்ட நச்சு ரசாயனங்கள் வெளியேறுவதாக நேச்சர் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.இந்த ரசாயனங்கள் ஆய்வுலகில் "டேர்ட்டி டஜன்" (Dirty Dozen) என்று அழைக்கப்படுகிறது.
டீ.டீ.டி. என்பது "டைகுளோரோ டை ஃபினைல் டிரைகுளோரோஇதேன்" என்ற ரசாயனமாகும். இது பூச்சிக்கொல்லி மருந்தாக நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டு வந்து பிறகு இதன் மோசமான சுற்றுச்சூழல், மற்றும் மனித உடல் ஆரோக்கிய விரோத செயல்கள் காரணமாக நீண்ட ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
2001ஆம் ஆண்டு இதன் பயன்பாடு உலகம் முழுதும் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரசாயனம் இயற்கையில் கரைந்து போக பல ஆண்டுகள் பிடிக்கும். மேலும் இது உயிர்பெருக்கம் அடையக்கூடியது. அதாவது உணவுச் சங்கியில் தாக்கம் செலுத்தி பல உயிரிகளின் இனப்பெருக்கக் கூறுகளை அழிக்கவல்லது.
மேலும் இது நீரில் கரைக்க முடியாதது. இதனால் மண்ணிலிருந்து நீருக்கும், பிறகு விண்ணுக்கும் விரைவில் சென்று தஞ்சமடைவது.
1993ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை ஆர்க்டிக் கடல் பனி உருகுதலை ஆய்வு செய்தபிறகு இந்த நச்சு ரசாயனங்களின் வெளியேற்றம் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இத்தனையாண்டுகளாக இந்த நச்சு ரசாயங்கள் பனிபாறைகளில் படிந்துள்ளன. தற்போது புவி வெப்பமடைதல் காரணமாக பனி உருகும்போது இவை மீண்டும் வெளியேறுவது தொடர்ந்து வருகிறது.
இந்த 12 நச்சு ரசாயனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆர்க்டிக் பிரதேச வான்வெளியில் சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வை நடத்திய கனடா நாட்டுச் சுற்றுச்சூழல் கழகம் இதனை பேராபத்து என்று எச்சரித்துள்ளது.
டீ.டீ.டி. ரசாயனத்தின் தாக்கம் பற்றி அமெரிக்காவின் நோய்கள் தடுப்பு மையம் 2005ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டபோது அப்போது அமெரிக்க மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் ஏறத்தாழ அனைத்து மாதிரிகளிலும் இந்த நச்சு ரசாயனம் இருப்பது தெரியவந்தது.
இந்த ரசாயனம் அனைத்து உயிரிகளுக்கும் ஊறு விளைவிப்பதோடு, மனித உடலில் சொல்லொணாத நோய்களை உருவாக்குவது என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றே.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 04:59, 27 ஜூலை 2011 (UTC)
நன்றி - வெப்துனியா
No comments:
Post a Comment