Friday, 5 August 2011

ஊறுகாய்(பகுதி-4)

16. ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாய்
தேவையானவை : எலுமிச்சம் பழம் - 25, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.


செய்முறை : எலுமிச்சம்பழத்தை எட்டுத் துண்டுகளாக நறுக்கி,  உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும்.  இப்படி, தினமும் குலுக்க... அவை உப்பில் நன்கு ஊறி மிருதுவாக மாறும். இதற்கு, எலுமிச்சம் பழம் அதிக சாறு உள்ள பழமாக இருப்பது அவசியம்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து ஊறவைத்த எலுமிச்சம்பழம் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சம் பழம் நன்கு ஊறிஇருப்பதால், அதிக நேரம் அடுப் பில் வைத்திருக்கத் தேவையில்லை.
இந்த ஊறுகாயை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

17. மாவடு ஊறுகாய்
தேவையானவை : மாவடு - ஒரு கிலோ (கீழே விழுந்த மாவடு கூடாது), கடுகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், விளக்கெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : மாவடுவை நன்றாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து துணியில் பரப்பி 2 மணி நேரம் காய விடவும். ஊறுகாய் ஜாடியில் மாவடுக்களைப் போட்டு, விளக்கெண்ணெய் விட்டுக் குலுக்கவும். பிறகு, கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு குலுக்கவும். இதேபோல் நான்கு நாட்களுக்குத் திரும்பத் திரும்பக் குலுக்கவும். அப்போது மாங்காயுடன் உப்பு சேர்வதால், ஜாடிக்குள் நிறைய தண்ணீர் பிரிந்து வந்திருக்கும்.
ஜாடியில் உள்ள மாவடுக்களை வெளியே எடுத்து வேறொரு ஜாடியில் போடவும். மாவடு ஊறிய ஜாடியிலிருக்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும். இன்னொரு ஜாடியில் உள்ள மாவடு உடன் கடுகுத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து... வடிகட்டி வைத்துள்ள உப்பு நீரையும் விட்டு நன்கு குலுக்கி வைத்து விட்டால் மாவடு ஊறுகாய் உங்கள் நாவில் எச்சில் ஊறவைக்கும்.
இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

18. ஆவக்காய் ஊறுகாய்
தேவையானவை : முற்றிய புளிப்பு மாங்காய் - 10, வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : புளிப்பு மாங்காயை நடுவில் இருக்கும் ஓட்டுடன் சேர்த்து நறுக்கி, ஒவ்வொரு துண்டையும் நன்றாகத் துடைத்துக் கொள்ள வேண்டும். கடுகு, உப்பு இரண்டையும் சில மணி நேரம் வெயிலில் காயவைத்து, தனித்தனியாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். மாங்காய் தவிர, மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக்  கலந்து கொள்ளவும்.
வாயகன்ற ஒரு ஜாடியில் மாங்காய் துண்டுகளை ஒரு கை போடவும். கலந்து வைத்திருக்கும் பொடிக் கலவையை அதன்மீது ஒரு 'லேயர்’ தூவவும். மீண்டும் மாங்காய் துண்டுகள் ஒரு 'லேயர்’, பொடிக்கலவை ஒரு 'லேயர்’ என மாற்றிமாற்றிப் போடவும். கடைசியில், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் கிளறி விடவும். ஜாடியின் வாய்ப்பகுதியை வெள்ளைத் துணியால் மூடி இறுகக் கட்டிவிட வேண்டும்.
ஒரு வாரம் கழித்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 2-3 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

19. மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய்
தேவையானவை : தோல் சீவிப் பொடியாக நறுக்கிய மாங்காய் இஞ்சித் துண்டுகள் - அரை கப், மாங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : மாங்காய் இஞ்சியுடன், மாங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... அரைத்த மாங்காய் - இஞ்சி விழுதையும் சேர்த்துக் கிளறினால், சுவையான மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய் ரெடி!
இதனை, ஒரு மாதம் வரையிலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

20. வெங்காய ஊறுகாய்
தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, புளி - 25 கிராம், கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, கழுவி எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும், அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, இறக்கி ஆறவைத்து, ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ன்றி - விகடன்

No comments:

Post a Comment