21. ஸ்டஃப்டு மிளகாய் ஊறுகாய்
தேவையானவை : இளம் பச்சை நிற மிளகாய் (பெரியது) - 20, கடுகு - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மிளகாயின் காம்பு நீக்கி, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடுகைப் பொடித்து, அதனுடன் உப்பு, சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒவ்வொரு மிளகாயின் உள்ளே வைத்து அடைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு ஜாடியில் போட்டு, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலந்து, குலுக்கி வைக்கவும். அவையெல்லாம் ஒன்றாகக் கலந்து, நன்றாக ஊற... மிளகாயின் காரமும் எலுமிச்சையின் புளிப்பும் கலந்து மிகுந்த சுவையுடன் இருக்கும்.
காற்றுப்புகாத, ஈரமில்லாத ஜாடியில் வைத்திருந்தால், ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
22.புளியங்காய் ஊறுகாய்
தேவையானவை : இளம் புளியங்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 15, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்த வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : புளியங்காயைக் கழுவித் துடைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இடித்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, வெந்தயப்பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி சேமிக்கவும்.
ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
23. காய் - கனி ஊறுகாய்
தேவையானவை: துருவிய ஆப்பிள் - கால் கப், துருவிய கேரட் - கால் கப், துருவிய பரங்கிக்காய் - கால் கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், பரங்கிக்காய், காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து துருவி வைத்துள்ள ஆப்பிள் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... அரைத்த காய்கறி விழுதைச் சேர்த்து மீண்டும் சுருள வதக்கி இறக்கவும்.
இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவை கலந்து இருப்பதால் வித்தியாசமாக இருக்கும்.
இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
24. எலுமிச்சை திடீர் ஊறுகாய்
தேவையானவை : எலுமிச்சம் பழம் - 10, நறுக்கிய பச்சை மிளகாய் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : எலுமிச்சை பழத்தைக் கழுவி, கொதிநீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு, வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி... கால் கப் தண்ணீர் விடவும். நறுக்கிய எலுமிச்சம் பழம் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும்.
இந்த திடீர் ஊறுகாயை அதிக பட்சம் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
25. பச்சை மிளகாய் ஊறுகாய்
தேவையானவை: பச்சை மிளகாய் - 200 கிராம், கடுகுத்தூள், ஆம்சூர்பொடி (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கடுகுப்பொடி, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து... ஈரமில்லாத பாட்டிலில் போட்டு, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.
இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
நன்றி - விகடன்
No comments:
Post a Comment