11. மாங்காய் இஞ்சி ஊறுகாய்
தேவையானவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 5, எலுமிச்சம்பழம் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காய் இஞ்சியை மண் போகக் கழுவி, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை நறுக்கிய இஞ்சியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு பிழிந்து, அதையும் சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் முழுக்க ஊறவிட... சிம்பிள் மாங்காய் இஞ்சி ஊறுகாய் ரெடி!
தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
12.பச்சை மிளகு ஊறுகாய்
தேவையானவை : பச்சை மிளகு - 250 கிராம், எலுமிச்சம்பழம் - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை : பச்சை மிளகினை காம்பிலிருந்து உதிர்த்துக் கழுவி... ஈரம் போகக் காய விடவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழச்சாற்றில் பச்சை மிளகு, உப்பு சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும். மிளகில் எலுமிச்சை சாறு ஊறி, ருசியாக இருக்கும்.
இது தயிர்சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் ஊறுகாய்!
இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
13.மாங்காய் தோல் ஊறுகாய்
தேவையானவை : மாங்காய் தோல் - அரை கப், வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தோல் தடிமனாய் உள்ள 7-8 மாங்காய்களை துண்டுகளாக நறுக்கி, கல் உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும். அது, இரண்டு நாட்கள் ஊறியதும்... வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க... மாங்காய் தோல் ரெடி! சரியான அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாங்காய் தோலைப் போட்டு வேக விடவும். வெந்ததும், தண்ணீரை வடிகட்டி விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் சேர்த்துக் கலந்த பிறகு, பொடித்த மிளகாயையும் சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து கொள்ளவும்.
மாங்காய்த் தோலை பூஞ்சணம் பிடிக்காமல் 'ஸ்டாக்’கில் 6 மாதம் வரை வைத்திருக்க...
இந்த திடீர் ஊறுகாயை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
14. துருவிய மாங்காய் ஊறுகாய்
தேவையானவை: புளிப்பு மாங்காய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்த் துருவலைச் சேர்க்கவும். சிறிது வதங்கியதும்... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கிக் கிளறவும். கடைசியாக, பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இரண்டு வாரங்கள் கெடாமல் நன்றாக இருக்கும்.
15. பூண்டு ஊறுகாய்
தேவையானவை : தோல் உரித்த பூண்டு - ஒரு கப், கடுகுப்பொடி - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய். உப்பு - தேவையான அளவு
செய்முறை : தோலுரித்த பூண்டுடன் மிளகாய்த்தூள், கடுகுப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, நல்லெண்ணெய் விட்டு, மீண் டும் ஒருமுறை எண்ணெய் சீராக பரவுமாறு கலந்து வைக்கவும். பூண்டு அந்தக் கலவையில் ஊற ஊற, ஊறுகாய் சுவையுடன் இருக்கும்.
ஒரு மாதம் கெடாமல் இருக்கும் இந்த ஊறுகாய்.
நன்றி - விகடன்
No comments:
Post a Comment