Friday, 5 August 2011

ஊறுகாய் (பகுதி-2)

6.பச்சை மிளகாய் - எலுமிச்சை ஊறுகாய்
தேவையானவை: எலுமிச்சம்பழம் - 10, இஞ்சி - 100 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, நீளமானத் துண்டுகளாக நறுக்கவும். கண்ணாடி பாட்டிலில் நறுக்கிய எலுமிச்சம் பழத்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாயுடன் உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பாட்டிலை நன்கு குலுக்கவும். ஒரு வாரம் வரை, இரண்டு மூன்று முறை பாட்டிலைக் குலுக்கவும். அப்போதுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊறி, ஊறுகாய் சுவையாக இருக்கும். இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

7. நெல்லிக்காய் ஊறுகாய்
தேவையானவை: நெல்லிக்காய் - 20, வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... அதில் வேக வைத்த நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும். ஆறியதும், அந்தக் கலவையில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்கு கலந்துகொள்ள... விட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி!
இந்த ஊறுகாய் ஒரு வாரம் வரைதான் கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால், கூடுதலாக சில நாட்கள் இருக்கும்.

8.நாரத்தங்காய் ஊறுகாய்
தேவையானவை : நாரத்தங்காய் - 10, பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை : நாரத்தங்காயை கழுவி, துடைத்து சுருள் சுருளாக நறுக்கி... அதனுள் கல் உப்பை அடைத்து ஊறுகாய் ஜாடியில் வைக்கவும். நாரத்தங்காயின் தோல் தடிமனாக இருப்பதால் நன்கு ஊறுவதற்கு 3 நாட்கள் ஆகும். நன்கு ஊறியதும், அதை தனியாக எடுத்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் போகக் காய்ந்ததும் மீண்டும் பாத்திரத் தில் இருக்கும் உப்புத் தண்ணீரிலேயே போடவும்; மீண்டும் காயவைக்கவும். தோல் நன்றாக ஊறும்வரை இதேபோல் செய்யவும்.
பிறகு வெந்தயத்தை வறுத்து, மிளகாய்த்தூளுடன் சேர்த்து... ஊறவைத்த நாரத்தங்காயில் பிசறி நன்றாகக் கலந்து வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வாசம் வந்ததும் பயன்படுத்தலாம்.
ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

9. மாகாளி ஊறுகாய்
தேவையானவை: மாகாளிக் கிழங்கு - அரை கிலோ, விரலி மஞ்சள் - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 10, வறுத்த வெந்தயம் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாகாளிக் கிழங்கினை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி... நடுவில் இருக்கும் வேரை எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாயுடன் விரலி மஞ்சள், வறுத்த வெந்தயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதினை நறுக்கிய மாகாளிக் கிழங்குடன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக, எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கலந்து சில நாட்கள் ஊறவிட்டால்... ஊறுகாய் ரெடி!
இதனை ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

10. ஓமம் - மாங்காய் ஊறுகாய்
தேவையானவை: நீளவாக்கில் மெல் லியதாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 15 அல்லது 20, கீறிய பச்சை மிளகாய் - 4, ஓமம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் (அல்லது) கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய மாங்காயுடன் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்துப் பொரிக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி மாங்காய் - உப்புக் கலவையில் சேர்த்து நன்கு கிளற... ஓமம் - மாங்காய் ஊறுகாய் உடனடியாக சுவைக்க ரெடி!
இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நன்றி - விகடன்

No comments:

Post a Comment