
1980களில் எல்லோருடைய வீட்டின் மாடியிலும் காக்கா கக்கா போவதற்க்கு ஏதுவாக இருந்தது இந்த வகை டிவி ஆன்டனாக்கள் தான். அப்போது எங்கள் கடலூரில் என் மாமா வீட்டில் டிவி ஆன்டெனா வாங்கிய போது என் அத்தை பசங்கள் தாமோதரன் முரளிதரன் இருவருமே அந்த ஆன்டெனாக்களை ரெடி செய்து கட்டி இருக்கிறார்கள்..
பெரிய ஆன்டெனா சென்னை தொலைக்காட்சி சின்ன ஆன்டெனா புதுவை தொலைக்காட்சி , புதுவை தொலைக்காட்சியில் டெல்லிஒளிபரப்பை அஞ்சல் செய்வார்கள்...
அதுவும் திராவிட கழக கைங்கர்யத்தால் அந்த டெல்லி ஒளிபரப்பில் என்ன எழவு சொல்லுகிறார்கள் என்றே தெரியாது ? ( இப்போது மட்டும் என்ன வாழுதாம்)
அப்போ எல்லாம் சித்தரகார் பார்ப்பதற்க்கும் மாநில மொழி பட வரிசையில் தமிழ் படம் பார்ப்பதற்க்கும் டெல்லி ஒளிபரப்பை பார்ப்போம் . எப்போது தமிழ் பட வரிசை வரும் என்று காத்து இருப்போம் நம் முறை வரும் போது அப்போதுதான் பிரதமர் அல்லது ஜனாதிபதி என்று யாராவது மண்டையை போட்டு வைக்கும்... இல்லையென்றால் எலெக்ஷ்ன் அறிவித்து உயிரை எடுப்பார்கள்....
வெயில் காலத்தில் சென்னை தொலைக்காட்சி ஏதோ மழையோடு சோளப்பொறியோடு்ம் தெரியும், நன்றாக தெரிந்தால் பால் அச்சுக்கொட்டுவது போல் தெரிவதாக நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். மிக சரியாக படம் தெரியமாடியில் எறி ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு தெரியுதா? தெரியுதா? என்று சொல்லி வீட்டு மானத்தை வாங்குவோம்....
அதைவிட படம் நன்றாக தெரிய நல்ல மெல்லிய சேலையை டிவி மேல் போர்த்தி விட்டு படம் பார்த்து இருக்கிறோம். நன்றாக காற்று அடிக்கும் போது ஆன்டேனாக்கள் கீழே விழுந்த வீர மரணம் அடைந்து கிடக்கும் அதை பார்த்து காற்றின் மேல் கோபப்பட்டு இருக்கிறோம்....
அப்போது என் வீட்டில் அப்பா செகண்ட் ஹான்டில் 1500க்கு கருப்பு வெள்ளை டிவி வாங்கி வந்தார் ஆன்டெனா வாங்க காசு இல்லை( அப்போது கலைஞர் ஆட்சியிலும் இல்லை இலவச வண்ண தொலைக்காட்சி கொடு்க்க )
நான் என் தொழில் நுட்ப மூளையை பயன் படு்த்தி இட்லி தட்டில் அன்டெனா ஒயர் இனைத்து படம் வரவழைத்து இருக்கிறேன்...
நல்ல வெயில் காலத்தில் இலங்கையின் ரூபவாகினி வரும் வேறு நாட்டு தொலைக்காட்சி நம் இல்லத்தில் தெரிவதும் அதில் தமிழ் செய்திகள் இடம் பெறுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்...
சென்னை தொலைக்காட்சி அதன் இரண்டாம் அலைவரிசை மெட்ரோ செனல் அப்புறம் பாண்டியில் டிரான்ஸ்பாண்டர் மூலம் டெல்லி ஒளிபரப்பு மொத்தம் மூன்று சேனல்கள்தான் அப்போது தெரியும்... அப்புறம் உபெந்திரா தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருந்த போது மண்டல ஒளிபரப்பு தொடங்கப்பட்டு சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டெல்லி நிகழ்ச்சிகளை பிரைம் டைமில் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பிச்சை போட்டார்கள்....
1992களில்அதிஷ்ட காற்று மாறன் மகன்கள் பக்கம் வீசஆரம்பித்த நேரம் இந்த வகை டிவி ஆன்டெனாக்களுக்கு சங்கு ஊத நாள் குறிக்கப்பட்டது... இப்போது ஒரே வயரில் 150 சேனல் தெரிகின்றது .ஒளியும் ஒலியும் பார்க்கும் போது தெருவில் சன நடமாட்டம் குறைந்த நிலை மாறி இப்போது அமைந்தகரை அப்துல்காதர் விருப்பத்துக்கு பாடல் டெடிக்கேட் செய்ய படுகின்றது
என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா? படம் தெரியுதா ? என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது ....
No comments:
Post a Comment