Tuesday, 9 August 2011

மதியம் தூங்கணும்

மதியம் தூங்கணும்
மதிய நேரத்தில் தூங்கினால், உடல் எடை கூடும் என்று சொல்லப்படுகிறது. உண்மையா இது? வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால் ஆபத்து தான். ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும்.

அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

செப்பு பாத்திரத்தில் குடிநீர்

செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:
* கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.
* செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.
* ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.
* இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
* உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.
சத்து வீணாகிறது
கடையில் வாங்கிய, பதப்படுத்தப்பட்ட பழச்சாறு புட்டியின் மூடியைத் திறந்து விட்டால், அந்த பழச்சாற்றை, ஒரு வாரத்திற்குள் குடித்து விட வேண்டும். ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருந்தால், அதில் வைட்டமின் சி சத்து குறைந்து விடும். பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள் மீது, ப்ளோரோசென்ட் விளக்கு ஒளி பட்டால், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ரிபோப்ளாவின் சத்து குறைந்து விடும். எனவே, ஒளி புகாத வகையிலான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் பொருட்களையே வாங்க வேண்டும்.

வெறும் வயிற்றில் மருந்து?:
வயிற்றில் உணவு உள்ள நிலையில், ஒரு சில மருந்துகள், ரத்தத்துடன் கலப்பதில் தடை ஏற்படும். அத்தகைய மருந்துகளை, உணவு சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவிற்கு பிறகு 2 மணி நேரம் கழித்தோ சாப்பிடுவதால், அவை தடையின்றி உடலால் உறிஞ்சப்படுகிறது. டி.பி.,க்கான ரிபாம்பிசின், எலும்புகளில் கால்சியம் குறைபாடு நீக்கும் மருந்தான, பைபாஸ்போனேட்ஸ் மற்றும் சில மருந்துகளை, வெறும் வயிற்றில் தான் உட்கொள்ள வேண்டும்.

பைபாஸ்போனேட்ஸ்?:
“ஆஸ்டியோபோரோசிஸ்’ எனப்படும், எலும்புகளில் கால்சியம் குறைப்பாட்டிற்காக, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளே, “பைபாஸ்போனேட்ஸ்’ அடங்கியவை என்று கூறப்படுகின்றன. இந்த மாத்திரையை வெறும் வயிற்றிலேயே உண்ண வேண்டும். வயிற்றில் சிறிதளவு உணவு இருந்தால் கூட, இந்த மருந்து, ரத்தத்தில் கலப்பதில் தடை ஏற்பட்டு, அதன் வீரியம் குறைந்து போகும். இரவில் உண்ணக் கூடாது. மாத்திரை சாப்பிட்டவுடன், 45 நிமிடங்கள் வரை உறங்கக் கூடாது.

No comments:

Post a Comment