Tuesday, 9 August 2011

பக்திக்கு வேண்டாம் பணம்


ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.

No comments:

Post a Comment