Tuesday, 9 August 2011

பொடுகு தொந்தரவு…


ஆண்- பெண் இருபாலருக்கும் சாதாரணமாக காணப்படும் பிரச்சினை பொடுகு. உலக அளவில் 60 சதவீதம் பேர் பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள். இந்தியர்களில் 70 சதவீதம் பேருக்கு பொடுகுப் பிரச்சினை இருக்கிறது.

பொடுகு; அரிப்பை ஏற்படுத்துவதோடு நிரந்தர தொல்லையாக இருந்து எரிச்சலூட்டும் பிரச்சினையாகும். உச்சந்தலை தோல் செல்கள் இறந்து உதிர்வதைத்தான் பொடுகு என்கிறோம். தலையில் பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் வளர்வதாலும், தலைமுடியில் எண்ணெய் அதிகமாகவோ அல்லது எண்ணையின்றி இருந்தாலும் இந்தப் பிரச்சினைகள் வந்துவிடும்.

தலையில் சுரக்கும் சீபம் என்னும் திரவம் பூஞ்சை வளர காரணமாகிறது. மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பூஞ்சைகளும் சில நுண்ணுயிர்களும் தலையில் பெருகி வளர ஏதுவாகிறது.
ஆண்களுக்கு அதிகமாக சீபம் சுரப்பதால் அவர்களுக்கு பொடுகு பாதிப்பும் அதிகமாக ஏற்படுகிறது. பெண்களுக்கு கவலை மற்றும் தலையில் சேரும் ரசாயன மிச்சங்கள் காரணமாக அதிக அளவில் பொடுகு பிரச்சினை வருகிறது.
தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதனால் பொடுகு நீங்கிவிடாது.

மழைக்காலத்தில் பொடுகு உதிர்வது அதிகரிப்பதால் மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். தவறி, நனைந்துவிட்டால் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கழுவ வேண்டும். முற்றிலுமாக முடியை காய வைக்க வேண்டும்.
`கிளியர் பாரிஸ் இன்ஸ்டியூட்’ என்ற அமைப்பு இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் சீனாவிலும், இந்தியாவிலும் அதிகம்பேர் (70%) பொடுகு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

குறைந்த அளவாக ஜெர்மனில் 40 சதவீதம் பேருக்கு பொடுகுப் பிரச்சினை இருந்துள்ளது. தலையை சுத்தமாக வைத்திருப்பதும், சத்தான உணவுகள் உண்பதும், மனதை அமைதியாக வைத்திருப்பதும் பொடுகு தொந்தரவை குறைக்கும்.
***
நாம் வசிக்கும் பூமி சுற்றிக் கொண்டிருப்பது ஒரு அதிசயம். இந்த அதிசய பூமியில் இன்னும் ஆச்சரியமான விஷயங்களை உலக அதிசயங்களாக பட்டியலிடுகிறோம். அதிசயங்களுக்குள் புதைந்துள்ள ரகசியங்கள் என்றுமே வியப்பானவை. இதில் பிரமிப்பும், பிரமாண்டமும் காட்டுவதில் இயற்கையும், செயற்கையும் போட்டி போடுகின்றன. இமயம் இயற்கை அதிசயம் என்றால் பிரமிடுகள் செயற்கை அதிசயம்.
***
உலகில் உயரமான மலை, இமயம். அதில் இன்னும் உயர்ந்து சிறப்புடன் விளங்குவது எவரெஸ்ட் சிகரம். 1864-ம் ஆண்டுக்கு முன் அந்த சிகரத்தின் பெயர் `சொமோலங்மா’. ஆங்கிலேயே ஆட்சியில் சிகரங்களின் உயரம் அளவிடப்பட்டது. அப்போது பொது சர்வேயர் அதிகாரியாக இருந்த எவரெஸ்ட், `சொமோலங்மா’ சிகரம்தான் உயரமானது என கண்டறிந்தார். அதனால் அவர் பெயரே அந்த சிகரத்திற்கு சூட்டப்பட்டது. சிகரத்தின் உயரம் 29 ஆயிரத்து 28 அடி (8,848 மீட்டர்). இது தவிர 90 சிகரங்கள் இமயமலையில் உள்ளன.
***
காதலனுக்காக கட்டப்பட்ட காதல் நினைவாலயம் `மாசோலியம்`. இந்த உலக அதிசயத்தை உருவாக்கிய காதலி ஆர்ட்டிமிசியா. அவளது காதல் கணவன் பெயர் மாசோலஸ். தற்போதைய துருக்கியின் ஒரு பகுதியை முன்னொரு காலத்தில் ஆண்ட காதல் தம்பதி இவர்கள். இறந்த கணவருக்காக 8 அடுக்கில் 150 அடி உயரமுள்ள பிரமாண்ட கல்லறையை எழுப்பினாள் ஆர்ட்டிமிசியா. பணி முடியும் முன்பாக அவரும் இறந்துவிட, இருவரும் இணைந்திருக்கும் சிற்பம் கல்லறையில் வைக்கப்பட்டது. தற்போது சில பகுதிகளே எஞ்சியிருந்தாலும் காதலை சொல்லிக் கொண்டிருக்கிறது மாசோலியம்.
***
மனிதன் எழுப்பிய அதிசயங்களில் முதன்மையானது பிரமிடுகள். இவை எகிப்தியர்களின் கல்லறையாகும். இறந்தவர்களுக்கு வாழ்வுண்டு என்று சமாதிகள் எழுப்பி பொன்பொருளுடன் புதைப்பது அவர்கள் வழக்கம். கூபூ மன்னனுக்காக கட்டப்பட்ட பிரமிடுதான் உலகில் மிகப்பெரியது. இது 756 அடி அகல பக்கங்களும், 450 அடி உயரமும் கொண்டது. அளவிட முடியாத பொன் பொருட்கள் உள்ளே இருந்தாலும் உள்ளே செல்பவர்கள் திரும்ப வரமுடியாத நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த அதிசயத்தில் ஒளிந்திருக்கும் அதிசயம்.
***
விளையாட்டு விபரீதமாகும் என்பார்கள். விபரீதமே விளையாட்டுகளாக அரங்கேறிய விளையாட்டு அரங்கம் `கொலோசியம்’. இங்கு நடந்தவை எல்லாமே உயிர் பலி வாங்கும் போட்டிகள். அடிக்கடி அடிமை ஒருவன் சிங்கத்துடன் மோதி பலியாவான். கடற்போர் இதைவிட பிரபலம். விளையாட்டு அரங்கை நீரால் நிரப்பி இரு படகில் வீரர்கள் மோதி அழிந்து போவார்கள். இதை பலநாட்டு மக்களும் கூடி சகஜமாக ரசிப்பார்கள். இந்த கொடூர அதிசய அரங்கம் இன்றும் ரோம் நகரிலுள்ளது. கி.மு. 85 ஆண்டை சேர்ந்தது. 50 ஆயிரம் பேர் அமரலாம்.
***
வடக்கு ஆஸ்திரேலியாவில் இயற்கை பேரதிசயமான `ஏயர்ஸ்’ பாறை இருக்கிறது. இது 1873-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அப்போதைய பிரதமர் பெயர் சூட்டப்பட்டது. 3,200 மீட்டர் உயரமும், 11 கி.மீ. சுற்றளவும் கொண்டது இந்தப் பாறை. இவ்வளவு பெரிதாக இருந்தாலும் முழுவதும் ஒரே பாறையால் ஆனது என்பதால்தான் இது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது நிறம் மாறும் பாறை. பகலில் சிவப்பு கூடாரம்போல தோன்றும் பாறை, மாலையில் நீலம் கலந்த சிவப்பாக மாறுகிறது. நண்பகலில் மட்டும் பழுப்பு நிறமாக காட்சியளிக்கும்.
***
எகிப்திலுள்ள லக்சர், கர்னாக் ஆமான் ஆலயங்கள் பல சிறப்புகளுடையது. இந்த நைல் நதிக்கரை கோவில்களை 140 பிரமாண்ட தூண்கள் தாங்கி நிற்கின்றன. 10 முதல் 12-ம் நூற்றாண்டு வரை 3 நூற்றாண்டுகளாக கட்டுமானம் நடந்தது. கோவிலைக் கட்டிய 3 மன்னர்களின் சமாதிகள் கோவிலுக்குள் இருக்கிறது. அந்த பிரமிடுகளில் பூனைகள், முதலைகள், பல்லிகளின் உடல்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவை புதிய உயிரினங்கள்போல பாதுகாக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் வியக்க வைக்கிறது.
***
சந்தன கற்கோவிலாக விளங்குவது `அபுசிம்மல்’. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் எகிப்தின் கெய்ரோவில் உள்ளது. தொல்பொருள் ஆய்வாளர் கியாவன்னி பென்சானி, மணல்மேட்டை ஆய்வு செய்தபோது சறுக்கிச் சென்று புதைகுழிக்குள் சிக்கினார். அங்குதான் அபுசிம்மல் புதைந்து கிடந்தது. இப்படி தற்செயல் நிகழ்வால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உலக அதிசயம் இன்னொரு சிறப்புக்கும் சொந்தமானது. கோவில் இருந்த இடத்தில் அஸ்வான் அணைக்கட்டு கட்டப்பட்டதால் 1930-ல் இக்கோவில் அப்படியே பெயர்க்கப்பட்டு அருகிலுள்ள குன்றின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.
***
செம்மண் தரையால் ஆன பாலைவனம் பெரு நாட்டில் உள்ளது. இதில் பெரு வியப்புக்குரிய செய்தி இங்குள்ள அதிசய கோடுகள்தான். பல கிலோமீட்டர் நீளத்துக்கு உள்ள இந்தக் கோடுகள் இயற்கை கோடுகள் அல்ல. மனிதர்களால் வரையப்பட்டவையே. வானில் பறந்தபடி பார்த்தால் பூக்கள், சிலந்திகள், வேட்டை நாய் போன்ற உருவங்கள் கோடுகளில் தென்படுகிறது. இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. சுவராகவோ, பள்ளமாகவோ அமைக்கப்படாத இந்தக் கோடுகள் காற்றிலும், மழையிலும் அழிந்து போகாமலிருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

No comments:

Post a Comment